திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
3.76 திருவேதவனம் (வேதாரண்யம்) - திருவிராகம்
பண் - சாதாரி
கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்
இற்பலிகொ ளப்புகுதும் எந்தைபெரு மானதிடம் என்பர் புவிமேல்
மற்பொலிக லிக்கடன்ம லைக்குவடெ னத்திரைகொ ழித்தமணியை
விற்பொலிநு தற்கொடியி டைக்கணிகை மார்கவரும் வேதவனமே.
1
பண்டிரைப் வப்புணலி யிற்கனக மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல் வெறியார்
வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல் வந்தமொழி வேதவனமே.
2
காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பால்மகிழும் நம்பருறை வென்பர்நெடு மாடமறுகின்
தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை பாடலொலி வேதவனமே.
3
நீறுதிரு மேனியின் மிசைத்தொளி பெறத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கடொறும் பிச்சைநுகர் இச்சையர் இருந்தபதியாம்
ஊறுபொரு ளின்தமிழி யற்கிளவி தேருமட மாதருடனார்
வேறுதிசை யாடவர்கள் கூறஇசை தேருமெழில் வேதவனமே.
4
கத்திரிகை துத்திரிக றங்குதடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்துகளும் வேதவனமே.
5
மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகைம டங்கஅன லாடும்அரனூர்
சோலையின் மரங்கடொறும் மிண்டியின வண்டமது வுண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே.
6
வஞ்சக மனத்தவுணர் வல்லரணம் அன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தஅம ரர்க்கமர னாதிபெரு மானதிடமாங்
கிஞ்சுக விதழ்க்கனிகள் ஊறியசெவ் வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக இயக்கர்முனி வக்கணம் நிறைந்துமிடை வேதவனமே.
7
முடித்தலைகள் பத்துடை முரட்டுரு வரக்கனை நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற வியற்றுதல் கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே.
8
வாசமலர் மேவியுறை வானும்நெடு மாலுமறி யாதநெறியைக்
கூசதல்செ யாதஅம ணாதரொடு தேரர்குறு காதஅரனூர்
காசுமணி வார்கனகம் நீடுகட லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே.
9
இப்பதிகத்தில் பத்தாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
10
மந்தமுர வங்கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவனம் மேவுசிவன் இன்னருளினாற்
சந்தமிவை தண்டமிழின் இன்னிசை யெனப்பரவு பாடலுலகிற்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில் வார்களுயர் வானுலகமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
மூன்றாம் திருமுறை
பிற்சேர்க்கை
3. திருமறைக்காடு
பண் - கொல்லி
(பின்னர் கிடைக்கப் பெற்ற திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்)
விடைத்தவர் புரங்கள் மூன்றும் விரிசிலை முனிய வாங்கிப்
படைத்தொழில் புரிந்து நின்ற பரமனே பரம யோகீ
கடைத்தலை புகுந்து நின்றோம் கலிமறைக் காட மர்ந்தீர்
அடைத்திடுங் கதவு தன்னை யப்படித் தாளி னாலே.
1
முடைத்தலைப் பலிகொள் வானே முக்கணா நக்க மூர்த்தி
மடைத்தலைக் கமலம் ஓங்கும் வயல்மறைக் காட மர்ந்தாய்
அடைத்திடுங் கதவை என்றிங் கடியனேன் சொல்ல வல்லே
அடைத்தனை தேவி தன்னோ டெம்மையாள் உகக்கு மாறே.
2
கொங்கண மலர்கள் மேவுங் குளிர்பொழில் இமயப் பாவை
பங்கணா வுருவி னாலே பருமணி யுமிழும் வெம்மைச்
செங்கணார் அரவம் பூண்ட திகழ்மறைக் காட மர்ந்தாய்
அங்கணா இதுவன் றோதான் எம்மையாள் உகக்கு மாறே.
3
இருளிடை மிடற்றி னானே எழில்மறைப் பொருட்கள் எல்லாந்
தெருள்பட முனிவர்க் கீந்த திகழ்மறைக் காட மர்ந்தாய்
மருளுடை மனத்த னேனும் வந்தடி பணிந்து நின்றேர்க்
கருளது புரிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.
4
பெருத்தகை வேழந் தன்னைப் பிளிறிட உரிசெய் தானே
மருத்திகழ் பொழில்கள் சூழ்ந்த மாமறைக் காட மர்ந்தாய்
கருத்தில னேனும் நின்றன் கழலடி பணிந்து நின்றேன்
அருத்தியை அறிவ தன்றோ எம்மையாள் உகக்கு மாறே.
5
செப்பமர் கொங்கை மாதர் செறிவளை கொள்ளுந் தேசோ
டொப்பமர் பலிகொள் வானே ஒளிமறைக் காட மர்ந்தாய்
அப்பமர் சடையி னானே அடியனேன் பணியு கந்த
அப்பனே அளவிற் சோதீ அடிமையை உகக்கு மாறே.
6
மதிதுன்றும இதழி மத்தம் மன்னிய சென்னி யானே
கதியொன்றும் ஏற்றி னானே கலிமறைக் காட மர்ந்தாய்
விதியொன்று பாவின் மாலை கேட்டருள் வியக்குந் தன்மை
இதுவன்றோ உலகின் நம்பி எம்மையாள் உகக்கு மாறே.
7
நீசனாம் அரக்கன் றிண்டோள் நெரிதர விரலால் ஊன்றுந்
தேசனே ஞான மூர்த்தீ திருமறைக் காட மர்ந்தாய்
ஆசையை யறுக்க உய்ந்திட் டவனடி பரவ மெய்யே
ஈசனார்க் காள தானான் என்பதை அறிவித் தாயே.
8
மைதிகழ் உருவி னானும் மலரவன் றானும் மெய்ம்மை
எய்துமா றரிய மாட்டார் எழில்மறைக் காட மர்ந்தாய்
பொய்தனை யின்றி நின்னைப் போற்றினார்க் கருளைச் சேரச்
செய்தனை யெனக்கு நீயின் றருளிய திறத்தி னாலே.
9
மண்டலத் தமணர் பொய்யுந் தேரர்கள் மொழியும் மாறக்
கண்டனை யகள என்றும் கலிமறைக் காட மர்ந்தாய்
தண்டியைத் தானா வைத்தான், என்னுமத் தன்மை யாலே
எண்டிசைக் கறிய வைத்தாய் இக்கத வடைப்பித் தன்றே.
10
மதமுடைக் களிறு செற்ற மாமறைக் காட்டு ளானைக்
கதவடைத் திறமுஞ் செப்பிக் கடிபொழிற் காழி வேந்தன்
தகவுடைப் புகழின் மிக்க தமிழ்கெழு விரகன் சொன்ன
பதமுடைப் பத்தும் வல்லார் பரமனுக் கடியர் தாமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com